×

மங்களம் பொங்கும் பங்குனி மாதம்!

நன்றி குங்குமம் ஆன்மீகம்

கிரகங்களின் நாயகனான சூரிய பகவான், அவரது பகைக் கிரகமான சனி பகவானின் ஆட்சி வீடாக விளங்கும் கும்ப ராசியை விட்டு, குரு பகவானின் ஆட்சி வீடான மீன ராசியில் சஞ்சரிக்கும் காலமே பால்குண மாதம் எனவும், பங்குனி என்றும் பூஜிக்கப்படுகிறது.நவ கிரகங்களில் எவ்விதத் தோஷமும் இல்லாத எத்தகைய தோஷமானாலும், தனது சுபப் பார்வையினாலும், சேர்க்கையினாலும் உடனுக்குடன் அடியோடு போக்கும் சக்தி கொண்ட கிரகம் குரு பகவானே ஆவார். ஜோதிடக் கலையில் காலம் காலமாக மக்களிடையே நிலவிவரும் கருத்து, “ஓடிப் போனவனுக்கு ஒன்பதில் குரு! அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி!!” என்பது. அதே போன்ற மற்றொரு மூதுரை, “குரு பார்க்கில் கோடி தோஷம் நீங்கும்!” என்பதாகும். தேவ குருவும், நவக்கிரகங்களில் எவ்வித தோஷமும் இல்லாமல் விளங்குபவர் குரு பகவான் என்பதே இவற்றின் கருத்தாகும். சூரியன், பித்ரு மற்றும் ஆத்ம காரகன். குருவின் மீன ராசியில், சூரியன் சஞ்சரிக்கும் காலமாகிய பங்குனி மாதம் மங்களகரமான வாழ்வினை அளிக்கும் சுப மாதங்களில் ஒன்றாகும். திருமணம், உபநயனம், சீமந்தம், நிச்சயதார்த்தம் போன்ற சுப காரியங்களுக்கு ஏற்ற உத்தமமான மாதமாகும், பங்குனி!பரம பதிவிரதையான சாவித்திரி, எமதர்ம ராஜருடன் வாதாடி, போராடி, தன் கணவரின் இன்னுயிரை மீட்டு, அதன்பொருட்டு, தன் நன்றியைக் காட்டுவதற்காக விரதமிருந்து காரடை எனும் இனிப்பைத் தன் கரங்களினாலேயே செய்து, வெண்ணெயுடன் தர்மராஜருக்கு அமுது செய்வித்து (ைநவேத்தியம்) பூஜித்த “காரடையான் நோன்பு” புண்ணியத் தினமும் இந்தப் பங்குனி மாதத்தில்தான், திருமணமான பெண்களினால்,கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.அன்புடைய பெண்னின் பெருமையும், சக்தியும் அளவற்றவை. மனிதனாகப் பிறவியெடுக்கும் ஒவ்வொருவருக்கும், முற்பிறவிகளில் ெசய்துள்ள புண்ணிய காரியங்களின் பலனாக மட்டுமே கிடைக்கக்கூடிய அரிய பொக்கிஷம், அன்பும், பண்பும், கூடிய மனைவியே ஆகும். அன்பும், அறனுடன்கூடிய பண்பும் ஒருங்கே அமையப் பெற்றிருக்கும் மனைவியுடன் சேர்ந்திருப்பதே ஒருவருக்கு, ஓலைக் குடிசையேயானாலும், மகிழ்ச்சியையும் மன நிறைவையும் அளிக்கும். சற்றேனும் ஏறு – மாறாக மனைவி அமையப் பெறின், அரண்மனையும் இடுகாடாகிவிடும். இதையே தெய்வப் புலவர் திருவள்ளுவனும்,
“மனைமாட்சி யில்லாள்கண் இல்லாயின் வாழ்க்கைஎனைமாட்சித் தாயினும் இல்!” அதாவது, நற்குணங்களுடன்கூடிய மனையாள் ஒருவனுக்கு வாய்த்துவிட்டால், அவனுடைய அகத்தில், முழுமையான மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தரக்கூடிய இன்பத்தின் முகவுரையாகத் திகழும் அவ்வில்லத்தில், இல்லாத பொருள் இல்லை! அத்தெய்வத் தன்மையுடைய பெண்கள் வாழும் நாடே அனைத்து வளங்களும் நிறைந்த, சிறந்த நாடு என்றும், நல்நெறியற்ற மனையாள் அமைந்துவிட்டால், அவ்வீட்டில் எதுதான் நிலைத்து இருக்கும்? என்பதையும் கோடிட்டுக் காட்டுகின்றார், வள்ளுவப் பெருந்தகை. மனித வாழ்க்கையின் இன்ப, துன்பங்கள், மனைவி அமைவதைப் பொறுத்தே உள்ளது என்பதை எடுத்துக்காட்டுவது சாவித்திரிக்கும், எம தர்மராஜருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அது இந்தப் பங்குனி மாதத்தில்தான் நிகழ்ந்தது.

பங்குனி மாதத்தின் முக்கிய புண்ணிய நன்நாட்கள்!

பங்குனி 01 (14-03-2024) : காரடையான நோன்பு. விரதம் மதியம் 12.00 வரை. புது மாங்கல்யச் சரடு மாற்றிக்கொள்ள சுப முகூர்த்த 10.30 முதல், பகல்12.00 வரை ஆகும்.
பங்குனி 02 (15-03-2024) : சஷ்டி மற்றும் கார்த்திகை விரதம்.
பங்குனி 12 (25-03-2024) : பங்குனி உத்திரம். பூரண சந்திர ஒளியுடன் பிரகாசிக்கும் பெளர்ணமியுடனும், தமிழ் மாதக் கடைசி – 12வது மாதமாகிய பங்குனியும், 27 நட்சத்திரங்களில் 12-வது இடத்தை வகிக்கும் உத்திரநட்சத்திரமும் இணையும் காலத்தையே பங்குனி உத்திரம் எனக் கொண்டாடப்படுகிறது. மிகப் பெரும் புண்ணிய பலனைத் தரவல்லதும், சகல நலன்களையும், காரிய சித்தியை அருள வல்லதும், பணக் கஷ்டம், திருமணத் தடைகள், வாராக் கடன், ஆரோக்கியக் குறைவு போன்ற அனைத்துவிதத் தடைகளையும் நீக்கி, அனைத்துவித அபிலாஷைகளையும் நிறைவேற்றச் செய்து, வாழ்வில் வசந்தம் வீசச் செய்யும் புனித தினமே பங்குனி உத்திரம், யோக பயிற்சி செய்வதற்கும், தான – தர்மங்களைச் செய்ய, அவை பன்மடங்காகப் பெருகி, அபரிமிதமான பலன்களை அளிக்க வல்லதுமான நாள் இந்தப் பங்குனி உத்திரம்.
இந்நன்னாளில் சுப காரியங்களைத் தொடங்குவது மிகவும் உத்தமமாகும். அன்று நிகழ்ந்த தெய்வத் திருமணங்களாகிய பார்வதி பரமேஸ்வரர், தசரத குமாரர்களாகிய ராம -சீதா கல்யாணம், பரதன் – மாண்டவி, லட்சுமண-ஊர்மிளை, சத்ருக்கனன் – ஸுதகீர்த்தி, ஆண்டாள்-ரெங்கமன்னார், முருகன் – தெய்வானை, நந்தி – சுயசை, ஆகிய தெய்வங்களின் திருமணங்களும் இந்தப் பங்குனி உத்திரத் திருநாளில்தான் என்றால், இம்மாதத்தின் தெய்வீகச் சிறப்பிற்கு, வேறு சான்றுகளும் வேண்டுமா?! திருமகள், திருமார்பை அலங்கரித்ததாலே, “அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பன்” எனப் பூஜிக்கப்படும்
தினமும், வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கும் கலைமகள், நான்முகனின் நாவில் எழுந்தருளிய தினமும் இன்றுதான்! ஆதலால்தான், பங்குனியை “கல்யாண மாதம்” எனக் கூறுவர் பெரியோர்.
மேலும், சபரிமலை ஐயப்பனின் அவதார தினமும் இந்தப் பங்குனி உத்திரத்தில்தான்!

பங்குனி 12 (25-03-2024) : ஹோலிப் பண்டிகை. பக்தர்களில் உயர்ந்து விளங்கும் பிரகலாதனின் தந்தையான இரணியகசிபுவின் இளைய சகோதரி “ஹோலிகா”. இவளும் அசுர குணம் கொண்டவளே! இரணியன், தன் குழந்தை பிரகலாதனைக் கொல்ல முயற்சித்தபோது, தன் சகோதரனின் தீய செயலுக்கு உடந்தையாக, பாலகன் பிரகலாதனைக் கொல்ல முயன்றபோது, தீக்கு பலியானாள், ஹோலிகா இறந்த தினமே. ஆண்டுதோறும் இந்தப் பங்குனி மாதத்தில் “ஹோலி பண்டிகை” எனக் கொண்டாடப்படுகிறது.
பங்குனி 15 (28-03-2024) : சங்கட ஹர சதுர்த்தி.
பங்குனி 24 (06-04-2024) : சனிப் பிரதோஷம்.
பங்குனி 25 (07-04-2024) : மாத சிவராத்திரி
பங்குனி 26 (08-04-2024) : சர்வ அமாவாசை.
பங்குனி 27 (09-04-2024) : தெலுங்கு வருடப் பிறப்பு – யுகாதிப் பண்டிகை. பூமி காரகரான செவ்வாய் தோஷமனைத்தையும் போக்கும் லட்சுமி நரசிம்மருக்கு உகந்த தினம். ெசவ்வாய் பகவானின் ஆட்சிவீடாகிய மேஷ ராசிக்குச் சந்திரன் பிரவேசிக்கும் நட்சத்திரங்களில் முதன்மை ஸ்தானத்தைப் பெற்ற அஸ்வினியுடன் கூடும் நன்நாளையே பௌமாஸ்வினி நன்னாள் எனக் கொண்டாடுகிறோம். இந்தத் தினத்தில், லட்சுமி் நரசிம்மரின் திருவுருவப் படத்தை எழுந்தருளச் செய்து, துளசி இதழ்களால் அர்ச்சித்து, வெல்லம், சுக்கு, ஏலக்காய், தண்ணீருடன் கலந்த பானகம் அமுது செய்வித்தால், சகல வித நன்மைகளும் உங்களை வந்தடைவது திண்ணம். பங்குனி 29 (11-04-2024) : கார்த்திகை விரதம். நவக்கிரகங்களில், “குரு பார்க்கில் கோடி நன்மை” என்ற சொற்றொடர்களை மெய்ப்பிப்பதிலும், குரு பகவானின் சகல தோஷங்களைப் போக்குவதில் வல்லதுமான தாரா தேவி ஜெயந்தி.
பங்குனி 30 (12-04-2024) : சதுர்த்தி விரதம்.
பங்குனி 31 (13-04-2024) : வசந்த பஞ்சமி – லட்சுமி பஞ்சமி. லட்சுமி கடாட்சம் உண்டாவதற்கும், சகல சம்பத்துக்களுடன், 16 வகையான செல்வங்களையும் பெற்று மகிழ்ச்சியாகவும், மன நிறைவாகவும் வாழ்ந்திட வீட்டில் கலசம் வைத்து பூஜித்து, கனகதாரா ஸ்தோத்திரம், மஹாலட்சுமி ஸ்தோத்திரம் – அஷ்டோத்திரம், பாராயணம் செய்வது மகத்தான புண்ணிய பலனைத் தரவல்லது. தேவி பாகவதம், திருக்கோயிலுக்குச் சென்று, ஒன்பது மண் அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றிவைப்பதும், கர்ப்பக்கிரகத்தில் எரியும் தூண்டா விளக்கில் சிறிது நெய் சேர்ப்பதும் மகத்தான புண்ணிய பலனைத் தரவல்லது. இன்றைய தினம் கருட பகவானை தரிசித்தால், சகல பாவங்களும்விலகி, அனைத்துவித நன்மைகளும் உண்டாகும். எதிரிகள் விலகுவர்.

The post மங்களம் பொங்கும் பங்குனி மாதம்! appeared first on Dinakaran.

Tags : Panguni month ,Palguna month ,Lord ,Surya ,Aquarius ,Saturn ,Meena Rasi ,Guru Bhagavan ,
× RELATED கும்பாபிஷேகம் பண்ணும்போது, கருடாழ்வார் வர வேண்டும் என்கிறார்களே; ஏன்?